எடை குறைப்பும் ஆரோக்கிய வாழ்வியலும்
தேடிச் சோறு நிதந் தின்கிறோம். நேற்று சுவையைத் தந்த உணவு இன்றும் அதே நிறைவைத் தருவதில்லை. மறுபுறம் நடுத்தர வயதை எட்டும் முன்னரே உடல் உசிலை மணியாட்டம் சதை போட்டு விடுகிறது. இரைக்க இரைக்க ஜாக்கிங், ஜிம் என்று பிட்னஸுக்காக மேற்கொள்ளும் முயற்சியில் பர்ஸ் கரைகிறது, அட்டை தேய்கிறது உடல் இளைத்தபாடில்லை. மனதை வெகுவாகத் தயாரித்துக் கொண்டு இறங்கும் உணவுக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வார இறுதிவரைக்கும் கூட நீடிப்பதில்லை. இதெல்லாம் ஒத்து வராது என்று இறங்குகிற பேலியோ, வீகன் டயட்டுகள் எந்தளவிற்குப் பாதுகாப்பானது. அவை உடலில் ஏற்படுத்தும் சிக்கல்கள் என்னென்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது தோழர் உமர் பாருக்கின் பேலியோ சிக்கல்கள் எனும் நூல். பல்வேறு ஆய்வுத் தரவுகளை முன் வைத்து மரபு மருத்துவ உடலியல் பின்னணியுடன் துல்லியமாக எடுத்துரைக்கிறார். உணவின் வரலாற்று அடிப்படை, கலாச்சார அணுகுமுறை போன்றவற்றை நேர்த்தியாக விளக்குகிறார். முக்கியமாக வணிக மருத்துவம் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கும் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை தமக்குத் தாமே முரண்பட்டு அடிக்கும் பல்டிகளின் திரைமறைவு அஜண்டாக்கள் என்ன என்பதையும் அத்துறை சார் மருத்துவர்களின் ஆதாரங்களைக் கொண்டே நிறுவுகிறார். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பலரும் அலைந்து கொண்டிருக்கும் காலத்தில் உடலின் இயல்பான இயக்கத்தின் வழியாக நாம் உண்பதற்கு எளிய பொருத்தமான முறை என்ன என்பதை வழிகாட்டவும் செய்கிறார்.
தற்கால வாழ்க்கைமுறையில் பள்ளிப் பருவம் தொட்டே பதற்றம், கோபம் போன்ற மிகை உணர்வுகள் தலை தூக்கி விடுகின்றன. இம்மிகை உணர்வுகளுக்கு ஆற்றலை அள்ளி வழங்கும் அட்ரீனல் எப்படித் துவண்டு போகிறது என்பதையும் அதனை ஈடுசெய்ய முடியாத போது எத்தகைய நோய்கள் உருவாகின்றன என்பதையும் எடுத்து வைக்கிறார்.
வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்தாமல் உடலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியாது என்பதை அக்கறைப்பூர்வமாக ஆணித்தரமாக நிறுவுகிறார்.
சொந்த உடலைச் சுரண்டல் கருவியாகக் கருதாமல் அதனை மெய்யான அக்கறையுடன் பராமரிக்க விழையும் ஒவ்வொருவரும் வைத்திருந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டிய நூல் பேலியோ சிக்கல்கள்.
# போப்பு (எ) புருஷோத்தமன்
அக்கு ஹீலர்
உணவியலாளர்
பக்கம் 120.
விலை ரூ 130,
எதிர். வெளியீடு,
76 நியூ ஸ்கீம் சாலை,
பொள்ளாச்சி - 642002.
Comments
Post a Comment