வாழ்க்கை என்பது...
*25 வயதிற்குள் வாழ்க்கை முடிந்துவிட்டதா ?*
புத்தருக்கு எப்படி போதி மரமோ, ஆண்களுக்கு 25 வயது…
பெருவாரியான ஆண்கள் 25 வயதில் முக்தி நிலையை அடைந்து விடுகிறார்கள். அதுதான் முதிர்ச்சி என்ற ஓர் ஆகச் சிறந்த பொக்கிஷம். இதுநாள்வரை இளமைத் துடிப்பில் தான் செய்த தவறுகளின் பிரதிபலனாக, 24லிருந்து 26 வயதிற்குள் அனைத்து ஆண்களும் அன்னப் பறவைகளாக மாறுகின்றனர். அதுதான் தன் வாழ்விற்கு எது தேவை, தேவை இல்லை என்பதனை வகைப் பிரிக்கும் தந்திரம்.
இதில் தனது இருபதுவயதுகளில் இளைஞர்கள் (ஆண்களும் பெண்களும்) கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியதாக நான் நினைப்பது, *எடுத்துக்காட்டுகளின் பின்னால் ஓட வேண்டாம் என்பதேயாகும்.*
நமது வீடு, சமூகம், சமூக வலைதளங்கள், வேலை செய்யுமிடம் என எங்கு பார்த்தாலும் ஆயிரம் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி பதிலளிக்கும் கலாச்சாரம் அதிகமாக உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சிலவற்றை நான் கூறுகிறேன்.
பில்கேட்ஸ் சாதித்தார், நீயும் சாதிக்கலாம்.
ஜாக் மா சாதித்தார், நீயும் சாதிக்கலாம்.
KFC நிறுவனர் 60 வயதில் சாதித்தார், நீயும் எந்த வயதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
ஆண்கள் பெண்களை அடக்குமுறை செய்கிறார்கள், கற்பழிக்கிறார்கள், எனவே ஆண்கள் தீயவர்கள்.
பெண்கள் ஆண்களை ஏமாற்றுகிறார்கள், காதலித்து கைவிடுகிறார்கள் எனவே பெண்கள் பச்சோந்திகள்.
அசிங்கமான ஒருவரை அழகான பெண் மணம் முடிக்கிறாள். இது தான் உண்மையான காதல்.
அயல் வீட்டு பையன் அவ்வளவு மதிப்பெண் வாங்குகிறான். நீயும் அதே போன்று வாங்க வேண்டும்.
கந்தையாண்ட பொடியன் 50000 சம்பாதிக்கிறான். நீ எப்போ அதுபோல சம்பாதிப்ப.
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் தாழ்த்திப் பேசும் எடுத்துக்காட்டுகள்
இதுதான் காதல், இதுதான் மனிதம், இதுதான் வாழ்க்கை, என்று எடுத்துரைக்கும் எடுத்துக்காட்டுகள்.
சாதி, மொழி, மதம், இனம், மக்கள் என அனைத்தையும் பேசுபொருளாக மாற்றி, அவர்கள் காலத்தில் அப்படி இருந்தது. இவர்கள் காலத்தில் எப்படி இருந்தது. இதற்கு இவர்தான் காரணம், அது இது என்று எடுத்துக்காட்டுகளையும் தரவுகளையும் மாறிமாறி உமிழ்ந்து கொள்வதே, இக்கால அரசியல்.
அனைவருமே எடுத்துக்காட்டு கோப்புகளை கையில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிகிறோம். *நிதர்சனத்தைப் பேச மனம் ஏனோ விரும்பவில்லை*. யாரேனும் ஏதாவது கூறினாலே இல்லை நீங்கள் சொல்வது தவறு. இதோ இதற்கான எடுத்துக்காட்டு என்று ஏதோ முன்னர் நடந்த நிகழ்வை மேற்கோள்காட்டி பிறரை தாழ்த்த எண்ணுகிறோம்.
யாராலும் இன்னொரு பில்கேட்ஸ் ஆக மாற முடியாது.
யாராலும் இன்னொரு ஜாக்மாவாக முடியாது.
KFC நிறுவனர் 60 வயதில் சாதித்தார் என்பதை மேற்கோள்காட்டி, நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை எந்த வயதிலும் சாதிக்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே செல்லுங்கள், சரியா?
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.
இவர்களுடைய காலகட்டம், மக்களின் எதிர்பார்ப்புகள், அப்பொழுது இருந்த சூழல் முற்றிலும் மாறுபட்டது. *தற்போதுள்ள கால கட்டத்திற்கு ஏற்றாற்போல புதிய விடயங்களை கண்டுணர முற்படுங்கள்.*
ஆண்களும் பெண்களும் காதல், காமம், நட்பு, மனிதம், அது இது என்று எடுத்துக்காட்டுகளை மேற்கோள்காட்டி கற்பனையில் முழ்காதீர்கள். *எந்த சூழலிலும் நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மட்டும் சிந்தித்தால் போதும்.* மேற்கோள்காட்டி யாரையும் தாழ்த்தவும் வேண்டாம், யாரையும் உயர்த்தவும் வேண்டாம்.
எடுத்துக்காட்டுகள் ஒப்பீடுகள் அனைத்தையும் ஒரு ஓரமாக வைச்சிட்டு, உண்மையில் நமது வாழ்க்கை சிறக்க என்ன தான் வேண்டும் என்பதனை சிந்தித்து செயல்படுங்கள்.
இதுபோன்று தேவையற்ற கற்பனைகளை ஒதுக்குவதன் மூலம் நிச்சயம் உங்கள் வாழ்வில் ஓர் ஒளி பிறக்கும். அது நீங்கள் காணும் அனைத்தையுமே அழகாக, மேலும் பிரகாசமாக காட்டும்.
உங்கள் வாழ்வின் உங்களுக்கான அனுபவங்களை பெற முற்படுங்கள். பிறரை மேற்கொள்காட்டி உங்களின் வாழ்வை இழக்க வேண்டாம்.
இப்பதிவை வயது வித்தியாசம் காணாமல் அனைவரும் ஏற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
நிச்சயமாக, இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள் இதனை புரிந்து கொள்வது, அவர்களை புதிய விடயங்களை நோக்கி பயணிக்க உதவும் என நம்புகிறேன்.
Piriyan🤍
Human Engineer
Comments
Post a Comment