சாதிய கட்டமைப்பு
நேற்றைக்கு இருவேறு முகநூல் நண்பர்களுடன் பேச வாய்த்தது. நமது மனம் எப்படிச் சாதிய மனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் புரிந்து கொள்ள அந்த உரையாடல்கள் வாய்ப்பாக அமைந்தன.
சம்பவம்: 1
...................
மாரியம்மன் வழிபாட்டைப் பற்றிய நெடிய தொலைபேசி உரையாடல். நானறிந்த பலசெய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். முக்கியமாக, எதனால் மாரியம்மன் வழிபாடு கொங்கு மண்டலத்தில் பரவலாக இருக்கிறது என்றும் கொங்கு வேளாளர்களால் மிக அதிகமாகக் கொண்டாடப்படுகிறது என்றும் விளக்கிக் கொண்டிருந்தேன்.
தம்பி சொன்னார் "நாம தாங்ணா நம்ம பண்பாட்டக் கட்டிக் காப்பாத்தறதோட அடுத்த தலைமுறைக்கும் கடத்தறோம்". குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது. ஏதேது நாமா? "நீங்க சொல்றது புரியலையே தம்பி கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க. நாமன்னா யாரு?".
"ஆயிரஞ் சாதிக்காரன் கொங்கு நாட்ல இருந்தாலும் நாம தானுங்ணா நம்ம கலாச்சாரத்க் கொண்டாடறவங்க? நாம தானண்ணா அடுத்த தலைமுறைக்கு நம்ம பண்பாட்டைக் கையளிக்கறவங்க! அதத் தான் சொன்னேன்" என்றார் தம்பி.
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தம்பி விவரமானவர். அவரே இப்படி இருக்கிறாரே என்று மனம் சங்கடப்பட்டது.
"தம்பி, பார்ப்பான் அகரம் தேவதானம் ன்னு இராஜாங்ககிட்ட வாங்கிக்கிட்டாப்ல கவுண்டன்களும் பாளையம் பட்டுன்னு வாங்கிச் சேத்துக்கிட்டவங்க தான். ஊர்ல இருக்கற எல்லா நிலமும் ஒரே ஒரு சாதிக்காரங்களுக்கு மட்டுமே சொந்தமா இருக்கிறது இயல்பான விஷயம் இல்லை. நிலவுடைமைச் சாதிக்கு ஆள்பலம் இருக்கும். அதனால அதிகாரம் இருக்கும். அதனால வாழ்வு கொண்டாட்டத்திற்கு உரியதாகவும் பெருமைக்குரியதாகவும் இருக்கும். அவன், மாரியம்மனைக் கொண்டாடுவான் கூத்தாடுவான் திகுறுதாப் போடுவான். பிள்ள குட்டிகளுக்கும் இந்தப் பெருமைகளைச் சொல்லிக் கொடுப்பான். மத்தவன் கொண்டாட இதில் எதுவுமே இல்லை" என்று விளக்கினேன். தம்பியின் குரலில் அதற்கப்புறம் சுரத்தே இல்லை.
ஒரு உபரித் தகவல். தம்பி, தீவிரத் தமிழ்த்தேசிய ஆதரவாளர்.
சம்பவம்: 2
....................
பேச்சு குழறியது. நிலைகொள்ளாத போதையில் இருந்தார் நண்பர். எங்கெங்கோ தட்டுத்தடுமாறிவிட்டுச் சங்கிகளிடம் வந்து நின்றது பேச்சு. "தேஞ் சத்தியப் பெருமாள்? இந்தச் சங்கிகளச் சாதீச் சொல்லிப் பேசுவேன். தப்பா எடுத்துக்குவீங்ளா?" எனக் கேட்டார். "சொல்லுங்க கேப்போம்", என்றேன்.
இரண்டு சங்கியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு "இவனுகெல்லா ஆருன்னு நெனைக்கறீங்க? நம்பூட்டுக்கு வந்து நம்புளுக்குச் செரைச்சு உடறவனுகங்க! எனக்குச் செய்யச் சங்கட்டமா இருக்குது கீழ செரைச்சு உடுன்னாச் செரைக்கற பசக...".
போதையிலிருப்பவரிடம் என்னத்தைப் பேசிப் புரிய வைக்க? அதற்கென்று பேசாமல் இருக்க முடியுமா? ஒரே குழப்பமாக இருந்தது எனக்கு. ஆனால் நண்பர் அவர் விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார். ஏதோ உணர்ந்து கொண்டவராகப் பேச்சைச் சட்டென்று இப்படி முடித்தார், "நாம் பள்ளன். பள்ளன்னு பெருமையாச் சொல்லுவனுங்க".
உபரித் தகவல்: நண்பர் நல்ல இலக்கிய ரசனை உள்ளவர். முற்போக்கானவரும் கூட.
https://www.facebook.com/100000918452805/posts/4315527045154535/
Comments
Post a Comment