தமிழும் ஆங்கிலமும்

பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியம். சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உணர்ந்தேன். 

புதிய நகர்ப்புற சூழல், ராக்கிங் கொடுமை. இவற்றோடு திரும்புகிற பக்கமெல்லாம் இங்கிலீஷ். இங்கிலீஷ் தான் பயிற்று மொழி, பேச்சு மொழி, நக்கல் மொழி, சிரிப்பு மொழி எல்லாம்.

அதிர்ச்சியிலிருந்து மீள ஓரிரு வாரங்கள் ஆனது. என்னைப் போலவே சுமார் 25-30 பேர் முகத்திலும் தமிழ் மீடியம் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. எங்களுக்கு முதலாமாண்டு படிப்பு கடினமாகவும் சற்று பயமுறுத்துவதாகவும் இருந்தது.

நண்பர்கள், சீனியர்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். நோட்ஸ்களை கொடுத்து உதவினார்கள். இரண்டாமாண்டு முதல் இறுதியாண்டு வரை ஆங்கிலம் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அனைத்து தமிழ் மீடிய நண்பர்களும் முதல் தடவையிலேயே இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தோம். 
***
ஆரம்பக்கல்வியை தமிழில் படித்தது, பாடங்களை புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொள்ள பேருதவியாக இருந்ததை பின்னாளில் உணர்ந்து கொண்டேன். அடித்தளத்தை தாய்மொழியில் அமைத்துக் கொள்வது மேலேறுவதற்கு உதவும் முக்கியமான காரணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

மற்ற மாநிலங்கள் தங்கள் மொழியை ஹிந்தியிடம் இழந்துவிட்டு நிற்கையில், தமிழ்நாட்டுத் தலைவர்கள் தமிழை காப்பாற்ற எடுத்துக்கொண்ட பெரும்முயற்சிகளுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

தமிழ்நாட்டுப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்பது அதிகமாகி வருகிறது. அதுவும் அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி. ஆங்கிலமும், ஆங்கிலத்திலும் கற்பதனால் இறக்கைகள் வலிமையாகின்றன. வெகு தூரத்திற்கு பறக்கிறார்கள். 

தமிழ்நாட்டைத் தவிர, பிற மாநிலங்களில் ஆங்கிலத்தில் பேசுவோர் குறைவு. தலைநகர் டெல்லி சுத்த மோசம். ஆங்கிலம் தெரிந்தாலும் ஹிந்தியில் தான் பதில் சொல்வார்கள். நம்மீது அவ்வளவு பாசம்! 

நவீன அறிவியல், மருத்துவ, தொழில்நுட்ப கல்வியை ஆங்கிலம் தவிர்த்த பிற இந்திய மொழியில் கற்பதற்கு தடையாக இருப்பதில் முக்கியமான காரணம், ஆங்கிலத்தில் எழுதப்படும் புத்தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கைகள். இந்திய மொழி எதுவும் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது. மருத்துவ பாடப் புத்தங்கள் பற்றி தனியாக சொல்லத் தேவையில்லை.
***
படிப்பறிவற்ற ஒருவர் பணக்காரராகவோ, உயர்ந்த ஜாதியினராகவோ இருக்கும் பட்சத்தில் அவருக்கு சமூகத்தில் எந்த பிரச்சினையும் இருப்பதில்லை. பணமும் ஜாதியும் அவருக்கு உயர்ந்த அந்தஸ்தையும் கௌரவத்தையும் கொடுத்து விடுகிறது. அவருடைய வாரிசுகளுக்கும் அதே அந்தஸ்தும் கௌரவமும் சிறிதும் குறையாமல் கடத்தப்படுகிறது.

இந்திய இந்து சமூகத்தில், கீழ்ஜாதியினரைப் பொறுத்தவரை ஏழ்மையும் கல்வியின்மையும் ஒட்டிப் பிறந்த குழந்தை மாதிரி. இங்கு, ஏழ்மையிலிருந்து விடுபடுவதற்கு கல்வி மிக முக்கியமான துடுப்பாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்வதற்காக கல்வி கற்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கல்வி வாழ்வாதாரத்தை அளிக்கிறது. புதைகுழியில் இருந்து மீட்க கல்வியை விட்டால் வேறுவழியில்லை.
***
'ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளி என்று அர்த்தமில்லை' என்றெல்லாம் வகுப்பு எடுப்பார்கள். நாம் ஆங்கிலத்தை படிக்க ஆரம்பித்த பிறகுதான் இது மாதிரியெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். 

இன்னொன்று. தமிழை மட்டும் படித்தவர்களால் தமிழ் வளரவில்லை. தமிழோடு ஆங்கிலமும், அறிவியலும், கணிப்பொறியும் கற்றவர்களால் தான் இருபத்தியோராம் நூற்றாண்டின் கணனியிலும், செல்போனின் தொடுதிரையிலும் தமிழ் எழுத்துகள் ஒளிர்கின்றன. 
***
ஆங்கில மொழி வெறும் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல. அது ஒரு அறிவுக் களஞ்சியம். உலகின் எந்தவொரு பெரிய மொழியையும் மிஞ்சுமளவுக்கு அதிகமான அறிவுப் பெட்டகங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை கற்பித்து சிலிக்கான் பள்ளத்தாக்கில் செட்டில் பண்ணிவிட்டு, செத்துப்போன சமஸ்கிருதத்தை நம்மீது திணிக்க வருகிறார்கள். 

தங்கள் உயர்ஜாதி ஒளிவட்டத்துக்கு சமஸ்கிருதத்தை வைத்து அரசியல் செய்தவர்கள், நாம் ஆங்கிலம் கற்று உலகத்தை உற்றுப்பார்க்க, பகுத்தாராய தொடங்கும் போது அச்சம் கொள்கிறார்கள். அவர்களுக்கு சமஸ்கிருதம் முக்கியமென்றால் படித்து போகட்டும். அது அவர்களே சொன்னது போல தேவபாஷை. சாதாரண மக்களான நமக்கு அவசியமில்லாத பாஷை. 
***
அடித்தட்டு பிள்ளைகள் ஆங்கில மொழியை பயில்வது சமூக விடுதலைக்கு மிகமுக்கியமான கருவி. எனவே இவர்களின் இத்துப்போன சென்டிமெண்ட்டல்  சூழ்ச்சியில் ஏமாறாமல், எனக்கு ஆங்கிலம்தான் முக்கியம் என்று உரக்கச் சொல்லுடா தம்பி!

From facebook

Comments