அறிஞர் தொ. பரமசிவன் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

அறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் 
'டங்கல் எனும் நயவஞ்சகம்' எனும் சிறு நூல் நம்மாழ்வார் ஐயா பேசுவதை எதிரொலித்தது. நம்மாழ்வார் ஐயா வேளாண்மையின் வேர்களைத் தேடியவர் என்றால் தொ. பரமசிவன் இந்த மக்களின் வேர்களைத் தேடியவராக இருக்கிறார்.

இருவருடைய பாதையும் வேறு வேறு. ஆனால் பயணம் ஒரே இலக்கை நோக்கியது. சுவரில்லா கல்வி வேண்டும் என நம்மாழ்வார் ஐயா சொல்கிறார். வட்டார கல்வி வேண்டும் என தொ. ப சொல்கிறார். உலகமயமாக்கல் தீது என தொ. பரமசிவன் கூறுகிறார். உள்ளூர்மயமாக்கலே தேவை என நம்மாழ்வார் முன் வைக்கிறார்.

செல்லும் இடமெல்லாம் மருந்தில்லா மருத்துவம் பற்றி நம்மாழ்வார் பேசினார். சித்த மருத்துவத்தின் தனித்துவத்தை தொ. பரமசிவன் எடுத்துக் கூறியுள்ளார். 

மரபறிவை குறி வைத்து தாக்கிய உலகமயமாக்கலை இவ்விருவரும் தத்தம் வழிகளில் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்கள்.

தொ. பரமசிவன் அவர்களை அறிஞர் என அடைமொழியிட்டு அழைப்பது சில நண்பர்களுக்கு கசக்கிறது. அதே போல நம்மாழ்வார் ஐயாவை வேளாண் விஞ்ஞானி என அழைப்பதுவும் ஒரு சாராருக்கு கசக்கிறது.

94 இல் உலகமயமாக்கலினால் பண்பாட்டு ரீதியாக மக்களுக்கு என்ன கேடு வருமென்றும், உழவர்களுக்கு என்ன சிக்கல் எழுமென்றும் முன்னறிந்து கூறிய இவ்விருவரும் எமக்கு அறிஞர் பெருமக்களே!!

தமிழ் நிலத்தில் நஞ்சை கொட்டுவதையும்  தமிழர் மரபான அறிவை அழிப்பதையும் தடுக்கும் பொருட்டு இவர்களுடைய மாணாக்கர்கள் செயல்படத் தொடங்கி விட்டனர். ஆம் மாற்றம் என்பது சொல் அல்ல! செயல்!!

Comments